மனநிறைவு...!
- Get link
- X
- Other Apps
நான் வெற்றிகரமானவனா ...?
என்னையே நான் திரும்பத்திரும்ப கேட்டுக் கொள்ளும் கேள்வி.
ஆனாலும் எனக்கு திரும்பத் திரும்ப "என் மன உள் இருந்து ", கிடைக்கும் பதில், நான்
" மன நிறை வானவன் " என்பதே!
மனநிறைவை தந்த நிகழ்வுகள் என் வாழ்வில் ஏராளம் உண்டு. அதில் எதுவும் 'வெற்றி' க்கு சான்றாக எவராலும் கொள்ளப்படவில்லை என்பது நிதர்சனம் !
நிகழ்வுகள்... :-
1. எனது 10 வயது என்று நினைவு, பாட்டி சொன்னபடி, மளிகை கடையில் லிஸ்ட் படி சாமான்கள் வாங்கிய பின் காசை கொடுத்து விட்டதாக நினைத்து, (கடையில் கூட்டம் அதிகம்) மீதி காசை கேட்டு,கடைக்காரர் நான் காசை தரவில்லை என்று கூறி, வீட்டில் பெரியவர் யாரையாவது அழைத்து வரச்சொல்ல, பாட்டி யை அழைத்து சென்று, பாட்டி கடைக்காரர் வசை மாரி பொழிந்தது, ஆளை விட்டால் போதும் என்று பின் மீதி காசை கணக்கிட்டு, கடைக்காரர் தந்தது... வீட்டிற்கு வந்த பின் எனது அரைக்கால் சட்டை பாக்கெட்டில் கை துழாவ , அதுவரை அகப்படாத காசுகள், அப்போது கையில் அகப்பட, பாட்டியிடம் தயங்கித் தயங்கி அழுது கொண்டே என் மீதுதான் தவறு என்று உண்மையை ஒப்புக்கொண்டு, நானே காசை கடைக்காரரிடம் கொடுத்து வருவதாக சொல்லியும், பாட்டி தான் ஏகத்துக்கு திட்டி விட்டதால், இப்போது வேண்டாம், வேறொரு சமயத்தில் தான் கொடுத்து விடுவதாக கூறினார்.
"என்மீது தவறை நான் உணர்ந்து, நானே காசை கடைக்காரரிடம் சென்று கொடுத்து விடுவதாக 'ஒப்புக்கொண்ட ( Affidavit - உண்மை விளம்பல் ) ' நேர்மை , மனநிறைவை பெற்றத் தருணம் !
2. எனது பட்டயப்படிப்பின் போது, தாத்தா வையும், தாய் மாமாவையும் சார்ந்திருந்த நிலை உணர்ந்த போதும், புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் ஏற்பட்டு, ஒவ்வொரு செமஸ்டரிலும் அரியர்ஸ் வைத்திருந்து, மன உறுத்தலால், கடைசி செமஸ்டரில் எடுத்துக் கொண்ட கடின உழைப்பாலும், கடவுளின் அருளாலும், அனைத்து அரியர்ஸ்களையும் ஒரே அட்டம்ட்டில் பாஸ் செய்து 'முதல் வகுப்பில்' தேறி வந்தது, மனநிறைவை பெற்ற தருணம்.
3. ரயில்வேபணியில் சேர்ந்து, மேற்படிப்பு பற்றிய எந்த குறிக்கோளும் இல்லாது, எனது 'சீனியர்' இருவர் மாலை நேர படிப்பாக பொறியியல் படிப்பில் சேர்ந்தபோது, என்னுள்ளும் ஒரு உந்துதல் ஏற்பட்டு, கிண்டி இன்ஜினியரிங் காலேஜில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க இடம் கிடைத்து, படிக்க தொடங்கியது முதல் முடித்தது வரை ஏராளமான இடர்களை கடந்து, கடைந்து எடுத்த அமுது, முத்து நான் பெற்ற 'பொறியியல் பட்டம்'... இந்த நாட்கள் நான் பெற்ற ஏராளமான மனநிறைவை உள்ளடக்கிய தருணங்கள்.
4. பெண் பார்த்தல் என்ற நிகழ்வுக்கு ஒப்பாது , எதிரான மனநிலை கொண்டிந்த நான்,
பார்த்த முதல் பெண் என்னை நிராகரித்தபோதும், ஏற்றுக்கொண்டு மணமுடித்த பெண்ணுடன் இன்று வரை, கோணல்களுக்கிடையிலும், தடம்புரளாமல் வாழ்க்கையை செலுத்தி க் கொண்டிருப்பவன்... இதுவும் மனநிறைவால் அன்றி வேறெதுவும் காரணமாக இராது!
5. என் வீட்டு மின்சார அளவீடு கருவியை சோதித்து, சரிபார்த்துத் தர மனு எழுதி தந்த போது, அங்கிருந்த அலுவலர்கள் சிரித்து நகைத்த நேரம் எனது நேர்மையை பறைசாற்றி, மனநிறைவை தந்த தருணம்.
இன்னும் தோண்ட, தோண்ட மனநிறைவை பெற்ற தருணங்கள் ஏராளமாக வந்து கொண்டே உள்ளது. அந்த மிகைமையே மிகப்பெரிய மனநிறைவு!!!
வெற்றி அல்ல என்று சொற்கள் எத்தனை சூழ்ந்து கைகொட்டியபோதும், அத்தனையையும், இடக்கையால் புறந்தள்ளி, இன்றளவும், நொடியும் உற்சாகமாக, "வாழ்ந்து" கொண்டிருக்க, என்னுள் பொங்கி வழியும் மனநிறைவே காரணம்...! அதுவே என் வாழ்தலின் பூரணம் !!
இவண்,
*சௌ.ராசா*
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment