உறவு... நம்பிக்கை.. திருத்தம்...!

 

"நான் இரவு என் மனைவியுடன் உங்க வீட்டில் தங்க வருகிறேன்" என்று தன் நண்பர் ஒருவருக்குத் தொலைபேசியில் ஒருவர் தகவல் தந்தார்.


அதற்கு அந்த நண்பர் "மகிழ்ச்சி வாருங்கள், ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், உங்கள் ஊரில் இருக்கிற உயர்தரமான பேக்கரியில் கொஞ்சம் காஸ்ட்லியான 'கேக்' வாங்கி வாருங்கள்" என்றார்.


"எதற்காக" என்று இந்த நண்பர் கேட்க, "என் மகன் தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றான், 'சர்பிரைசாக' அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாகக் கொண்டாட விரும்புகிறேன்.


என்னால் இப்பொழுது வெளியே செல்ல முடியாது. ஆகையால் நீங்கள் ஊரிலிருந்து வாங்கி வாருங்கள்" என்றார். அவர் கூறியவாறு அந்த நண்பர் கொஞ்சம் அதிகமாகவே செலவழித்து நல்ல 'கேக்' ஒன்றை வாங்கிச் சென்றார்.


அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும்.இவரும் ஊருக்குக் கிளம்பத் தயாரானார். 'கேக்'கின் விலை என்ன என்று கேட்டு நண்பன் அதற்குண்டான தொகையை கொடுப்பான் என்று எதிர்பார்த்தார்.

ஆனால், ஒரு அட்டைப் பெட்டியைக் கொடுத்து "கொஞ்சம் பெரியதாக வாங்கி வந்து விட்டீர்கள், மீதமுள்ள 'கேக்'கை உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள்" என்று ஒரு பெட்டியை கொடுத்தார்.


எவ்வளவு தொகை என்று கேட்டு பணத்தைக் கொடுப்பான் என்று எதிர்பார்த்தால் மீதத்தை நம் தலையில் கட்டி விட்டானே என்று ஊருக்குத் திரும்பும் வழியில், மனைவியிடம் தன் நண்பனை சபித்துக் கொண்டே வந்தார்.

"விடுங்கள், அவர் ஒருவேளை மறந்திருக்கலாம் அல்லது நாளை மறுநாள் அனுப்பி விடலாம் என்று நினைத்திருக்கலாம்" என்றார் மனைவி. இருந்தாலும் அவரால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

வீட்டிற்கு வந்து அந்த அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 'கேக்'குடன் பணமும், ஒரு கடிதமும் இருந்தது.


அந்தக் கடிதத்தில் "நண்பா, என்னுடைய பேச்சை மதித்து நீ என் மகனுக்காக 'கேக்' வாங்கி வந்தாய். தொகை எவ்வளவு என்று கேட்டு, அதைத் திரும்பக் கொடுத்து உன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. நீ வாங்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும். எனவே, இந்த பெட்டியில் வைத்து அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து இதை எடுத்துக் கொள்" என்றிருந்தது. 


அதைப் படித்தவுடன், அவரை... நண்பன் கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. அவனைப் பற்றி எவ்வளவு தவறாக நினைத்துவிட்டோம். ஆனால் அவன் நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாகக் கருதுகிறான் என்று வேதனையடைந்தார்.

மனம் வேதனைப்பட்ட அவர், உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு "உன்னைத் தவறாக புரிந்து கொண்டேன் என்னை மன்னித்து விடு" என மன்னிப்பு கேட்கப் போகிறேன் என்று மனைவியிடம் சொன்னார்.


அவ்வாறெல்லாம் பேசி இன்னொரு தவறை செய்யாதீர்கள். உங்களைப் பற்றி அவர் உயர்வாக நினைத்திருக்க, "அவரைப் பற்றி தவறாக நினைத்து விட்டேன்" என்று இப்பொழுது சொன்னால் அவர் வேதனைப்படுவார்.

உங்களின் மீதுள்ள மதிப்பு குறைந்து விடும் என்றார் மனைவி.

ஆம். பெரும்பாலும் நாம் அவசரப்பட்டு யூகத்தின் அடிப்படையிலும், ஆதாரங்கள் இல்லாமலும் மற்றவர்களைப் பற்றி தவறான முடிவுக்கு வந்துவிடுகிறோம்.


தெளிவான ஆதாரங்கள் கிடைக்காதபோது ஒருவரை குறை கூறுவது குற்றமாகும். அவர் தவறே செய்திருந்தாலும் அதற்கு... ஏதோ ஒரு நிர்பந்தம் அல்லது ஏதோ ஒரு காரணம் இருக்கலாம் என நாம் நினைப்பதால் நமக்கு இழப்பேதும் இல்லை.

ஆனால் தவறு செய்யாத ஒருவரை நாம் யூகத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கி மற்றவர்களிடம் பரப்பினால் நாம் குற்றவாளி ஆகிவிடுவோம்.

*நலமுடன் நட்பை பேணுவோம்

Comments

Popular posts from this blog

மனைவி வருகிறாள்...!

Expert Talk

Fathima Babu and Babu - interviw