சினம் கொல்லி...

 குற்றம் கடிதல்... சினம் கொல்லி... உபாயம் பற்றி  !!! 

( தலைப்பு கடினமாக உள்ளதா..??? ) 

 பல நேரங்களில் சிலரின் ( பல/சில விகிதம் அப்படித்தான் அமையும். மாறாக அமைந்தால் நமக்கு மனநோயின் அறிகுறி என்று கொள்ளலாம்.) சொற்கள் நம்மை கோபப் படுத்தலாம். அந்த சொற்கள் பொதுவான,  எவரையும் குறிப்பிட்டு சொல்லாத, சொற்களாக இருக்கலாம். அதிலுள்ள ஏதோ ஒரு 'சொல்' ( caption word) நம்மை கோபப் படுத்தலாம். காரணம் அந்த சொற்கள் ஏதோ ஒரு குறையை, அந்த குறையை தவிர்க்க அறிவுறுத்தும் சொற்களாக இருக்கலாம். அது நல்ல விஷயம் தானே! அது ஏன் நம்மை கோபப்படுத்த வேண்டும், என்ற கேள்வி எவர் மனதிலும் எழும். 

அத்தகைய அறிவுறுத்தலை தரும் நபர் அதே குறையை எந்த சூழலிலும் (அல்லது ) மிக பெரும்பாலும் ஏற்படுத்தாதவராக இருந்தால், ( எப்போதாவது ஏற்படுத்துபவராக அவர் இருந்தால்) அவரின் பேச்சு நம்மை கோபப்படுத்தாது. 

மாறாக அதே வகையான குறைகளை அடிக்கடி செய்பவர் ( டம்ளரை அருந்திய இடத்திலேயே வைத்து விடுதல்; மின்விசிறி, மின்விளக்கு உபயோகத்துக்கு பின் அமர்த்தாமல் அறையை விட்டு வெளியேறுவது ; இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம். ) எவருக்கும் அறிவுரை கூற தார்மீக உரிமை இல்லை. உள்நோக்கிய பார்வை உள்ள எவரும் ( Introspection) இதை செய்வதில்லை! 

இதற்கு உதாரணமாக காந்திஜியின் வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை சொல்லலாம். அவரின் ஆசிரமத்திற்கு ஒரு தாய் தன் மகன் சிறுவனை அழைத்து வந்து அவன் அதிக அளவில் இனிப்பு பண்டங்களை தின்கிறான்; அது உடல் நலக்குறைவு தரும் என்று அறிவுறுத்தி னாலும், கண்டித்தாலும், அடித்தாலும் கேட்பதில்லை. தாங்கள் அவனுக்கு அறிவுரை கூறினால் அந்த மந்திரச் சொல் அவனைக் கட்டுப்படுத்தும் என்று சிறுவனுக்கு அறிவுரை கூற, தாய் வேண்டுகிறார். 

காந்திஜி யும் அந்தத் தாயை நாளை வாருங்கள், நாளை வாருங்கள் என்று பல நாட்கள் திரும்பத் திரும்ப சொல்லி, பின் ஒரு நாள் அந்தச் சிறுவனை அருகில் அழைத்து அரவணைத்து, நீண்ட நேரம் அவர் பாணியில் சில கதைகள் சொல்லி இனிப்பை அதிகமாக உண்ண வேண்டாம்; குறைந்தஅளவில் உண்பதில் தவறில்லை. அம்மா தரும்போது மட்டுமே உண்பது நல்லது என்று சொல்லி அனுப்ப,   அந்த மந்திரச் சொல் வேலை செய்தது, சிறுவன் இனிப்பு கேட்டு தொந்தரவு செய்வதில்லை என்று தாய் சில நாட்கள் கழித்து காந்தியிடம் தெரிவிக்க.. காந்திஜி, பல நாட்கள் அந்தத் தாயை அலைக்கழித்த காரணத்தை விளக்குகிறார். தானும் இனிப்பு விரும்பியாக அதுநாள் வரை இருந்ததாகவும் அதை விடுவதற்கு தனக்கு அத்தனை நாட்கள் தேவைப்பட்ட தாகவும், அதன் பின் தன் சாதாரண சொற்கள், மந்திரச் சொற்களாக சிறுவனிடம் வேலை செய்தது, என்று குறிப்பிட்டார். 

அந்த அடிப்படையில் தானோ என்னவோ, தன்னிடம் குறைகளை வைத்துக் கொண்டு, அதே குறைகளுக்கு பிறருக்கு தரும் அறிவுரை சொற்கள் நம்மை  கோபப்படுத்த காரணமாக அமைகிறது. 

சரி. காரியம், அதன் காரணம் தெரிந்து விட்டது. கோபத்தை தவிர்க்க, வேறு ஆக்க பூர்வமான விளைவுகளை ஏற்படுத்த என்ன செய்யலாம்  ? 

கோபத்தை ஏற்படுத்தும் சொற்கள் ' தீப்பொறி' யாக கொள்ளலாம். தீப்பொறி தன் அருகில் உள்ள,  எளிதில் தீப்பற்றும் எந்தப் பொருளையும் எரிய (கோபப்பட) வைக்கிறது. 

எளிதில் தீ பற்றும் பொருள் 'எரிவாயு' அல்லது 'பஞ்சு'. எரிவாயு வெளியேற்றத்தை தடுக்க திருகி / மூடி உண்டு. 

ஆனால் பஞ்சு க்கு பாதுகாப்பு ஈரத்தன்மை, தீப்பற்றாமல் இருக்க! 

கண்ணுக்கு 'இமை' என்ற மூடி உண்டு. தகுதியற்ற காட்சிகளை தடுக்க. ஆனால் காதுக்கு மூடியில்லையை. தகுதி அற்ற ஒலிகளை தடுக்க முடியாதே! இங்கு தான் மூளை என்று கருவியில் அந்த கட்டுப்பாடு அமைப்பு உள்ளது. 

ஒலி முதற்கொண்டு அனைத்து உணர்வுகளும் அந்தந்த பொறிகளை வந்தடைந்தாலும் அந்த உணர்வுகள் மூளைக்கு கடத்தப்பட்டு மூளையால் அறிவுறுத்தப்பட்டால் ஒழிய அந்த உணர்வுகள் நம்மால் உணரப் படுவதில்லை!  

மனம் மூளை துணைகொண்டு கவனத்தை வேறு திசைக்கு திருப்பி விட்டால் ... மூளைக்கு கடத்தப்பட்ட மற்றைய உணர்வுகளுக்கு மூளையிலிருந்து கட்டளைகள் கிடைப்பதில்லை... அந்த உணர்வுகள் உணரப் படுவதில்லை... மரக்கட்டை யாக மரத்துப் போய்விடும். 

கவனத்தை மடை மாற்றம் செய்ய... 

மனசு என்ற 'பஞ்சு' க்கு ஈரம் கொண்டு வர, அன்பு, அதன் பால் வரும் பக்தி இவையே ' மனம் கசிந்து உள் உருகி ' மனசு என்ற பஞ்சை நனைத்து ஈரப் படுத்தி, கோபம் வராது தடுக்கும் உபாயம் ஆகும். 

இந்த உபாயத்தை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவபெருமானிடம் புலம்பும் சொற்களில் வெளிப்படுத்துகிறார். 


".....கசிந்து உள் உருகும், 

நலம் தான் இலாத சிறியேற்கு  நல்கி, நிலந்தாம் மேல்வந்தருளி நீள்கழல்கள்காட்டி, நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு , தாயிற் சிறந்த தயாவான தத்துவனே..! 

மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே, தேசனே, தேன்ஆர்அமுதனே! பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே!.... " 

இப்படியாக திருவாசகம் மேலும் விரிகிறது. 


இந்த விவாதத்தில் ஒன்று தெளிவாகிறது.  பஞ்சு போன்ற மனதை அன்பு, பக்தி கொண்டு ஈரமாக வைத்துக் கொள்கிற போது, கோபம் அண்டாது, தீண்டாது பாதுகாக்கப்படுகிறது! 


பிறர் எழுப்பும் சொற்கள் நம் கையில் இல்லை.. நம் மனம் கோபப் படாமல் தடுக்கும் உபாயம் நம் கையில் மட்டுமே உள்ளது. உபாயங்களை கண்டறிவோம், முற்ச்சிப்போம்... சினத்தை கொல்வோம்... நல் குணங்களை கொள்வோம்  ! 


வாழ்க வளமுடன்  ! 


*சௌ.ராசா*


Comments

Popular posts from this blog

Expert Talk

மனைவி வருகிறாள்...!

Fathima Babu and Babu - interviw